Pages

Posted on: Thursday, April 15, 2010

பசியோடு பட்டங்கள்...!
பசியோடு பட்டங்கள்...!

கருமேகங்கள் ஓன்று கூடி
அழுது கொண்டிருந்தன...

வற்றிய மார்பில்
பச்சிளங் சிசுவை
அணைத்தபடி,
இரத்தத்தை பாலாக்க,
ஒரு துளி இரத்தத்திற்காக
சிக்னலில் ஒவ்வொரு வாகனமாக
அலைந்துக் கொண்டிருந்தாள்
அந்த பிச்சைக்காரி...!

நனையாமல் இருக்க
கோப்புகளுடன் சேர்த்து
பட்டங்களை மார்போடு
அணைத்துக்கொண்டேன் …!

அந்த பச்சிளங் குழந்தையைப்போல் ,
மார்போடு ஓட்டிக் கொண்டது
பட்டம்..!

Posted on: Wednesday, April 14, 2010

இடுகாட்டில்  காத்திருப்பேன்..!


இடுகாட்டில் காத்திருப்பேன்..!

என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டவளே...!

உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!

என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால் ,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிசமாய் என் அறையில்..!

சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...

தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி ..

ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொருதரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது …!

எல்லா பெண்களையும்
போல் தானே நான் ,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய் ...

பிரியமே..!
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது...?

வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்..
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக்கொள்ள ஆசைப்படுகிறேன் ...

உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர்ப்போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்... !

Posted on: Tuesday, April 13, 2010

வாழ்க்கை நாடகம்...!வாழ்க்கை நாடகம்...!


நாடகம் நடக்கிறது
இயக்குனர் யாரென்று தெரியாமலே...!

முகத்திற்கு முன்னே
பணக்கட்டுகள் ...
பிடித்திட ஓடிக்கொண்டே
இருக்கிறேன் ....

என் தோளின் மீது
ஒருவன் அமர்ந்துகொண்டு
என் முன்னே பணத்தை
கட்டி தொங்கவிட்டு
வேடிக்கை பார்க்கிறான்
என்பதை அறியாமலே...

பொருளே பிரதானமான
பொருளாதார உலகில்
உறவுகள் விலை பொருளாய்...

தகனம் கூட தனமில்லையேல்
தாழ்வாரத்தில் அழுகும், உடல்..!

சேர்த்து வைத்த
பணம் எல்லாம்
வெறும் காகிதம் என்று தெரியவரும்
முதுமையில்....

நல் உறவுகளை
இளமையில் சேர்த்து
வைக்காததால்,

பணத்தை துரத்தும்
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்து விட்ட உறவுகளை
முதுமையில் தேடி திரிந்து
பலனில்லை...!

மனிதா...!
வாழ பணம் தேவை!

ஆனால்,
பணத்திற்காய்
பொய் வேஷம் கட்டுவதை
கலைந்து ஏறி...!

வாழ்க்கை நாடகம்
காலமெல்லாம் இனிக்கும்!

Posted on: Monday, April 5, 2010

குமுதம் வார இதழில் எனது பயணம்...

நன்றி குமுதம் 07/04/2010


பயணம்


சந்தோசமாய் காரில் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்ட வசந்திக்கு சரவணனின் நடவடிக்கை எரிச்சலை தந்தது.
டிரைவருடன் வழியெங்கும் சகஜமாக சிரித்து, சிரித்து பேசியபடியே வந்தவன் ஓட்டலில் தங்களுடனே உணவருந்த வைத்தான். ஹைலைட்டாக டிரைவருக்கும் சேர்த்து ஓட்டலில் ரூம்போட்டபோது பொங்கி விட்டாள் வசந்தி.

"என்னங்க இது? டிரைவரையும் சரி சமமா நம்மோட சாப்பிட வைத்துக்கொண்டு..?"

" நம்ம குடும்பத்தோட உயிரையே டிரைவர் கைல கொடுத்துவிட்டு நாம சந்தோசமா பயணிக்கிறோம். அப்போ அவரை சரி சமமா நடத்தினால் என்ன தப்பு?"

"அதில்லைங்க. டிரைவரோட பேசிக்கொண்டே வர்றீங்க..."

" நாம பேசிக்கொண்டே வந்தால் டிரைவரால தூங்க முடியாது. அதனால இரவுல நாம பாதுகாப்பா பயணம் செய்யலாம். அவங்களும் மனிதர்கள் தான். நம்மளோட இப்படிப் டிரைவரா வரும்போது, நாம குடும்பத்தோட இப்படி போக முடியலியேன்னு அவங்க மனசுல ஏக்கம் வரலாம். அதுல கவனம் சிதறினால் நமக்கு தானே ஆபத்து? என்ன சொல்ற வசந்தி"

"சரிங்க. நாளைக்கு டிரைவர் அண்ணாவோட எங்க பாகிறோம்?"

சரவணன் சிரிக்க, வசந்தி வெட்கத்தில் அவன் தோளில் ஐக்கியமானாள்.
 
Tweet