Pages

Posted on: Monday, March 5, 2012

தினமலர் வாரமலரில் நாளை என்பது ...






நாளை என்பது ...




 நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும் நம்பிக்கை!

இன்றைய பசியை,
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது...
ஆனால்,
நம்பிக்கையூட்டும்!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட,
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது!

நாளைய நம்பிக்கைதான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன்!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ, உனக்கு சுமையாகக் கூடாது!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கைதான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரையீரல்
நிறைக்கிறது!

நம்முன், தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயிரோடு இருந்து
உண்ணப் போகிறோம்
என்ற நம்பிக்கையின்
வெளிப்பாடு!

வா... நாளையை
ஒரு கை பார்ப்போம்...
உள்ளர்ப்பணத்தோடு
உழைப்போம்!

நாளை - உன் வீட்டு
வேலைக்காரனாகும்!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும்
நம்பிக்கை பசை!

Posted on: Friday, February 10, 2012

உனக்கு நீயே பரிசாய் ....!


பணத்தை துரத்தும் 
போராட்டத்தில் 
தொலைந்து போன வாழ்கை, 
திருவிழாவில் தொலைந்துபோன 
குழந்தையை போல்
எங்கோ உட்கார்ந்து 
அழுது கொண்டுத்தான் இருக்கிறது ....!

அம்மா முதியோர் இல்லத்தில் ...
மகள் குழந்தைகள் காப்பகத்தில் ....
மனைவி எட்டு பத்து பஸ்ஸில் ....
ஒன்பது மணி பஸ்சை
பிடிக்கும் அவசரத்தில் கணவன் ....
- தொலைந்து போன வாழ்வின்
மிச்சங்கள் ....!

மனைவியுடன் துய்க்க ...
குழந்தையுடன் விளையாட ...
அம்மாவுடன் பேச ....

வயிற்றுக்காய் வாரத்தில்
ஆறு நாட்களை தின்று
எழாவது நாளுக்காய்
கலைத்து காத்திருக்கும்
நீர்த்து போன வாழ்கை ...!

தின்று, கழித்து
கடத்தி வந்த நாட்களில்
வாழ்ந்த நாட்கள் எத்தனை ...?

தின்பதும், கழிப்பதும்
வாழ்கை எனில்
மிருகமாய், பறவையாய்,
புழுவாய் பிறந்திருக்கலாமே ....?

தேடி, தேடி சேர்த்து வைத்த
சொத்துக்களுக்காக
இழந்த சொந்தங்கள் எத்தனை ...?

சுவிசில் மில்லியனிலும்
பில்லியனிலும்
பணம் இருந்தாலும்
மக்கி மண்ணாய்த்தான்
போயாக வேண்டும் ....!

மண்ணாசையில் இடுகாட்டை கூட
அபகரித்ததால் தகனம்
மின்சார மேடையில்
கட்டாயமானது ...

வாழ்க்கை ஒரு கைப்பிடியில்
சுருங்கி போனது ....!

ஆறடி நிலம் கூட
உறுதியில்லாத வாழ்வில்
வீண் முக மூடிகள் எதற்காக ...?

பொய் முகத்தை கிழித்தெறிந்து
சுயத்தோடு வாழ்வோம் ...!

மனிதனுக்கு மனிதநேயத்தோடு
வேண்டும் போது தோழனாய் ...

தாய்க்கு தள்ளாத முதுமையில்
தாயாய் ...

மனைவிக்கு தோல்வியில் தோளாய் ...
அழும் கண்களுக்கு
கண்ணிற் துடைக்கும் கரங்களாய் ...

நண்பா...!
பணம் மட்டுமே குறிக்கோளான
வியாபார வாழ்க்கை,
உனக்கு கரண்சிகளை தரலாம் ...

ஆனால்,
வாழ்க்கையை தராது ...!

சந்தோசத்தில் பெரிய சந்தோசமே
சமூகத்தில் உடன் வாழ்வோரையும்
சந்தோசமாய் வைத்திருப்பது தான்   .....

அந்த சந்தோசத்தை 
உனக்கு 
நீ 
பரிசளிப்பாயா ....? 

Posted on: Monday, January 30, 2012

தினமலர் வாரமலரில் ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!

நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012






ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!





அகிம்சையை போதித்தவனுக்கு,
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!

செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!

வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!

அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!

மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!

உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!

எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா? 

Posted on: Wednesday, November 30, 2011

உன் வார்த்தையை வாழவைக்கவேணும் ….

 காத்திருக்கிறேன் …….

புற அழகில் கவர்ந்த கண்கள்
அக மனதில் இணையும் போது
காதல் பிறக்கிறது ….!

புற அழகிலேயே நின்றுவிட்டவை
காமம் ….!

காதலுக்கும் 
காமத்திற்கும் 
நூலிடை வித்தியாசம் தான்,
உடல் மேல் போர்த்திய
ஆடையைப்போல் …
மெல்லிய உணர்வு ….!

விடியலில் படுக்கையை விட்டு
எழும் முன்
கடைசி ஐந்து நிமிட 
தூக்கத்தைப்போல் சுகமானது
காதல் …..!

இதயம் பாறையாய் 
தவம் கிடக்கும் 
தன்னை சிலையாய் 
செதுக்கப்போகும் 
உளிக்காக ….

இதயம்
தாய்மை அடைந்து தவிக்கும் …!

காதல் …
கண்களற்ற, 
காதுகளற்ற,
மூலையற்ற
ஜுவன் ….!

ஒத்த உணர்வுகள்
தனி உலகில் புணர,
விதவனைப்போல் 
தனிமைப்படுத்தி வைத்திருக்கும்
இன்ப அவஸ்த்தை 
காதல் …!

நான்
நீ
என்று யாரோவாக இருந்த நாம்
நான், நீயாகவும்
நீ, நானாகவும்
வளர்சிதை மாற்றத்தால்
“நாம்” ஆக்கிவைக்கும் காதல் ….

ஒரு மொட்டில்
ஒரு மலர் தான் …
அது காதலுக்கும் பொருந்தும் …!

என்று …
காதலை,
காதலுடன்
சொல்லிக் கொடுத்தவளே ….!

நீயும்
நானும்
நாமாக போகும்
வளர்சிதை மாற்றத்திற்காய்
காத்திருக்கிறேன் …

காதலில் காத்திருத்தல்
மட்டுமே பல நூற்றாண்டுகலாய்
காதலை சாகாமல் 
வைத்திருக்கிறது என்றாய் ….

காத்திருப்பேன் …
உன் வார்த்தையை
வாழவைக்கவேணும் ….

உனக்காக ….



     

Posted on: Tuesday, October 11, 2011

பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!




பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!

 


கனவுப் போலத்தான் 
வாழ்க்கை ……!

கனவு விடிந்தால் 
கரைந்து போகும் ….
வாழ்க்கை கனவு 
கலைந்து எழுந்தால்
உடன் நடித்த ஒரு
கதாபாத்திரம் காணாமல்
பேயிருக்கும் ………!

பணம், பதவி, மரியாதையெல்லாம்
நாம் உண்ணும் உணவைப்போல்,
ருசிக்க , ருசிக்க பசிக்கும்
ஆனால்,
நிரந்தரமின்றி வீணாய்ப்போகும் ……..!

ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க
நான் யார் தெரியுமா?
என்று கேட்கும் ஆணவம்
அதே கேள்வியை
தனிமையில் தன்னை நோக்கி
கேட்க  ’நான்’ 
காணாமல் போயிருக்கும் …..!

காலுக்கு கீழ் அடிமையைப்போல்
கிடக்கும் பூமி,
-நிரந்தரமானது ……!

நானே எஜமான் என
மார்தட்டி திரிந்தவன்
மக்கி, மண்ணாய் அதே
பூமியோடு ஜக்கியமாவது
வாழ்வியல் சூத்திரம் …..!

உன்னை
எரிக்கலாம்,
அல்லது,
புதைக்கலாம் ……….

இதுவரை நீ சேர்த்து வைத்த
சொத்துக்கள் ……
சொந்தங்கள் ….
பதவிகள் …..
அதிகாரங்கள் ….
தம்பட்டங்கள் ….
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் …
ஆசிர்வாதங்கள் ….
ஏதேனும் துணைவருமா …. ?

தீ சுடும் …!
வாழ்ந்தோர் சொல்கேட்டும்
தெளியலாம் …
தொட்டுப்பார்த்தும் பாடம் கற்கலாம் ….!

ஆறடி நிலம் கூட
உறுதியில்லாத வாழ்வில்,
கொண்டு போவதற்கு 
என்ன இருக்கிறது ….?

வாழ்ந்த நாளில்
உனக்கு பயந்து எத்தனை பேர்
உன்னுடன் வந்தார்கள்
என்பது பெரிதில்லை …..

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை 
நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….!

மனிதனாய் பிறப்பது எளிது ….
மிருகமாய் வாழ்வது எளிது …..
தெரு நாயைப்போல் 
செத்துப்போவது எளிது …..

நீ
மனிதனா ….?
மிருகமா ….?

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….

Posted on: Thursday, September 29, 2011

எனக்கே, எனக்காக .. கண்ணீரோடு காதல் சொல்லிப்போ ...

நன்றி பதிவர் தென்றல் செப்டம்பர் 2012



இடமாற்றுப்   பிழை  நீ எனக்கு ....


 
 
 
 
 
 
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....

பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....

இல்லாதிருந்தால்,

உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?

பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....

இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...

விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ  என
என் மனம் உடைந்து அழுகிறது ...

பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!

தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!

நீ வா ...

அல்லது,

எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...

கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!

Posted on: Wednesday, September 28, 2011

தாம்பத்தியம் போல் சுயம் கொண்டது முதுமை ...!








 வாழ்க்கையும் வாழ்பவர்களும் .....


 
 
 
 
 
முதுமை வாழ்வின்

மொழி...!

வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்களின் வழிகாட்டி...!

வாழ்க்கை சுழற்சியின்
இரண்டாவது குழந்தை பருவம்
முதுமை...!

தான் பெற்ற குழந்தையிடமே
தான் குழந்தையாகி போகும்
பரிணாமம் ...!

தாம்பத்தியம் போல்
சுயம் கொண்டது முதுமை ...!

அனிச்ச மலராய்
மனமிருந்தாலும்

வாடுவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை ....!

சுருங்கிய முகத்தை விட
சுனோ பூசிய முகம்
ஈர்ப்பானதால்,

இரும்பு இதயத்தை  பெற்றவர்கள்
இரும்பு கட்டிலில்
முதியோர் இல்லத்தில் ....!

கிரிச்சில் மகன் ...

முதியோர் இல்லத்தில் பெற்றோர் ...

வெந்ததை அவசரகதியில்
அள்ளிப்போட்டு,
எட்டு மணி பஸ்ஸை பிடித்து,
சம்பாதித்து  என்ன
 செய்ய  போகிறோம் ...?

நாளை
எதோ ஒரு முதியோர் இல்லத்தில்
எதோ ஒரு இரும்பு கட்டிலில்
படுத்துக் கிடக்கவா...?

மனிதா ...!
வாழ்க்கை அழகிய கவிதை ....

கூச்சலிடும் குழந்தைகள் ...
கூடத்தில் "டொங் டொங்.."  என
வெற்றிலை தட்டியபடியே
அளவாடும் பெற்றோர் ...
தோட்டத்தில்,
துள்ளி குதித்து திரியும் அணில் ...

நினைத்திடவே ஆனந்தம்
பெருகுகிறது ...

வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும் ...

நாட்களை  நகர்த்திப் போவது
பாவம் ...!

வாழ்கையை வாழாமல்
வெந்ததை தின்று
பணத்தின் பின் திரிதல்
பிணத்திற்கு சமம் ...!

நாளைய நமது
முதுமை சுகமாய் இருந்திட ,

நமது குழந்தைகளுக்கு
நாம் தான் கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை சுவைக்க
கொடுக்க வேண்டும் ...!

வாழ்க்கை அழகான கவிதை ...!

கூச்சலிடும் குழந்தைகள் ..
கூடத்தில் அனுபவ முதிய பெற்றோர் ...
மிகவும் ஆதரவாய், பாதுகாப்பாய்
உணரும் நம் மனம் ...!

வாழ்க்கை சுழற்சியின்
அழகிய பருவம்
முதுமை ..!

Posted on: Thursday, September 22, 2011

கடைசி பிச்சை …





கடைசி பிச்சை …
ஊனப்பட்டுப்போன 
மனம் படைத்தோர்
வாழும் உலகில் …

சிற்பியின் கவனச்சிதறல்களால் 
சிதறிப்போன
கண்ணாடி சிதறல்கள்
நாங்கள்.....

ஊனமனது வார்த்தை
பிரதிபலிப்பால்
சுருங்கி துடிப்பது
எங்கள் இதயம் மட்டுமல்ல
எங்களின் மனமும் தான் ....!

ஆண்பால் ...
பெண்பால் ...
என்று பிரிக்க தெரிந்த
வக்கிர மனதுக்கு
மூன்றாம் பாலினத்தை
உச்சரிக்க தைரியமில்லை ....!

உடல் ஊனம் என்றால் கூட
செயற்கை உறுப்புகள் உண்டு ...
மன ஊனத்திற்கு ....?

மாற்று பாலினம் என்று
ஒதுக்கியதால்,
பசியரக்கன் முன்
பிச்சைக்காரர்களாய் ...

பால் மாறிப்போனதால்
பாலியல் வெறியர்களில்
பார்வையில் பாலியல்
தொழிலாளியாய் ....

இறைவனை நோவலாம்
என்றால்,
அவனும் கூத்தாண்டவர் கோவிலில்
எங்களுக்கு போட்டியாய் ....

இனி பொறுப்பதில்லை ...
குட்ட, குட்ட குனிந்து
கூன் போட்ட புற முதுகும்
எங்களுக்கு தேவையில்லை ....

மனிதர்கள் வாழ வேண்டிய
பூமியில்
மனிதத்துவம் மறந்து
வாழ்வோரே ...!

உங்களிடம் எங்களின்
கடைசி பிச்சை ....

எங்களை நீங்கள்
மூன்றாவது பாலினமாய்
ஏற்றுக்கொள்ள வேண்டாம் ....
அது எங்கள் உரிமை ...!

தரங்கெட்ட வார்த்தையால்
மனதை காயப்படுத்துவதை
தவிருங்கள் ...!

தெருவில்,
தெரு நாயை கல்லெடுத்து
அடித்தால் கூட,
கேட்க ப்ளூ கிராஷ்
என்று ஓன்று உண்டு ....

எங்களுக்கு ....?

மனிதர்கள் வாழ வேண்டிய
உலகில்
மனிதர்களுடன் மனிதர்களாய்
வாழ ஆசைப்படுகிறோம் ....!

கடைசி பிச்சையாய் ....

மனிதா....!
சகோதரத்துவம்
போற்றுவாய .... ?


Posted on: Tuesday, July 19, 2011

தினமலர் வாரமலரில் இடுகாட்டில் காத்திருப்பேன் ....!

நன்றி தினமலர் வாரமலர் 17/07/2011





இடுகாட்டில் காத்திருப்பேன் ....!







என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக் கொண்டவளே...

உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!

என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால்,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிஷமாய் என் அறையில்!

சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...

தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி...

ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொரு தரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக் கொண்டே
இருக்கிறது!

எல்லா பெண்களையும்
போல் தானே நான்,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய்!

பிரியமே...
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது!

வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்...
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்!

உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர் போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்!

Posted on: Tuesday, July 5, 2011

பாக்யா வார இதழில் சாயம் போட்ட மனிதர்கள்

நன்றி பாக்யா 8-14/07/2011
 
 

Posted on: Tuesday, June 28, 2011

கல்கி வார இதழில் நிறைவேறிய எனது ஏக்கம்...

நன்றி கல்கி வார  இதழ் 03/07/2011


                                       ஏக்கம்


           
மாமர ஒற்றைக் கிளையில்


குயில் கச்சேரி...

தாவித் தாவி நடனமிடும்

அணில்...

மார்கழி காலை

குளிரில் போர்வைக்குள்

பூனைக்குட்டியாய்

கடைசி ஐந்து நிமிடத்

தூக்கம்...

ரசித்திட ஆசை...

ஞாயிறு வருமென

சமாதானம் சொன்னது

இயந்திர வாழ்க்கை!

Posted on: Monday, May 23, 2011

கல்யாண சந்தையில் பாக்யா வார இதழ்


நன்றி பாக்யா  -  மே 27-  ஜூன் 2 , 2011




Posted on: Thursday, April 14, 2011

பாக்யா வார இதழின் பார்வையாளர்கள் நேரம்

நன்றி பாக்யா 15-21/04/2011




Posted on: Monday, April 11, 2011

தினமலர் வாரமலர் வீரிய வித்தா ...?

நன்றி தினமலர் வாரமலர் 10/04/2011





வீரிய மிகு வித்து....!




ஒரு மணிநேரத்திற்கு
விலை பேசினால்
-விலைமகள் ..!

ஆயுளுக்கும் விலை பேசினால்
-கணவன்..!

பத்து நிமிடம் உடலை
சுமப்பவளுக்கு கொடுக்கும்
அங்கீகாரத்தை கூட,
பத்து மாதம்
தன் விந்தை
சுமப்பவளுக்கு கொடுப்பதில்லை
இந்த அசிங்கம் பிடித்த சமூகம்...!

பதினாறில்
பெற்றவர்களின் சொல்லில்
சிறையாகி ...

இருபதில்
மூன்றுமுடிச்சில் சுயம் தொலைத்து...

ஆறுபதில்
தன் தொப்புள்கொடியே
பாரமாய் நினைக்கையில் ....

மரமாய் ...

மரம்
பூப்பதுண்டு ....
சூடிக்கொண்டதில்லை....

மரம்
காய்ப்பதுண்டு ...
புசிப்பதில்லை....!

அதனால்,
சில மரங்கள்
முதியோர் இல்லங்களில்...

வீட்டிற்கு ஒரு மரம்
வளருங்கள்...
ஆனால்,
பெண்களை மட்டும்
மரமாய் வேண்டாம்....

அடுத்த தலைமுறையின்
வீரிய மிகு வித்து
அவள் ....!

Posted on: Tuesday, March 15, 2011

இப்படிக்கு, காதல் …







நெஞ்சமெல்லாம்
நீ வீசிவிட்டுப்போன
ஆழிக்காற்று ….

புயல் அடித்து
அடங்கிய பிறகும்
அலைகள் ஓய்ந்தபாடில்லை ….!

என்றேனும் கரைக்கு
நீ வருவாய்
என்ற ஆவலில்
கரை மோதி
நீ இன்றி ஏமாந்து
கடல் திரும்பும் அலைப்போல் ,
என் மனம் ….!

உன்னுள் இடிக்கும் இடிக்கு
என்னுள் வெள்ளக்காடாவது
தவிர்க்க முடியவில்லை …!

காதலிக்க இரு மனங்கள் போதும் …!
ஆனால் ,
திருமணத்திற்குத்தான்
எத்தனை தடைகள் … ?

நான்
உன் ஜாதி இல்லை …
நான்
உன் மதமில்லை ….
ஆனால் ,
நான் உனக்கு நல்ல
துணையாய் இருப்பேன் …!

என்னின் பிரதியே …!
இந்த சமுகம்
நம் மீது ஆழிக்காற்றை வீசினால் ….
ஆழிக்காற்றுக்கு நெஞ்சையும்
உனக்கு தோளையும்
தருவேன் …!

திசை பற்றிய எண்ணம்
மடிந்து துடுப்பற்ற
இந்த படகிற்கு துடுப்பாய்
என்னை இயக்க  வருவாயா …?

இப்படிக்கு,
காதலை மட்டுமே
உண்டு சுவாசித்து
உனக்காக காத்திருக்கும்
காதல் … .!

Posted on: Tuesday, February 22, 2011

ஒரு முறையே பூக்கும் பூவிது ...!








காதலுக்கும்
காமத்திற்கும்
நூலிடை வித்தியாசம் தான் ....
உடல் மேல் போர்த்திய
ஆடையை போல்...!

இதயம் பாறையாய்
தவம் கிடக்கும்
தன்னை சிலையாய்
செதுக்க போகும்
உளிக்காக ....!

கண்களால் தழுவி
இதயத்தால் புணர்ந்த
காதல் தாஜ்மகாலாய்
நிமிர்ந்து நிற்கும் ...!

மெய்யற்ற மெய்  மேல்
கொண்ட காதல்
நிமிடங்களில் வடிந்து போகும் ....!

ஒரு மொட்டில் ஒரு மலர்தான் ....

இறைவனடியும் சேர்க்கலாம் .....
இறுதி ஊர்வலத்திலும்  .....

காதலிக்கும் முன் யோசி
அது காதல்தானா
என்று ....

நீ உன் பெற்றோரை விட
புத்திசாலித்தான்..!

அனால் ,
கயவர்கள் அதைவிட
புத்திசாலிகள் ...!

காதலுக்கும்
காமத்திற்கும்
நூலிடை வித்தியாசம் தான் ....

உனக்கு பகுப்பதில்
குழப்பமெனில்
உன் பெற்றோரிடம்
விட்டுவிடு ...!

உன் நலனில் அக்கறையுள்ளவர்கள்
வேறு யார்
இருக்கபோகிறார்கள்...?

ஏன் எனில் ...

ஒரு மொட்டில் ஒரு மலர்தான்
பூக்கும்....!

Posted on: Friday, February 4, 2011

தொலைத்து விட்டு தேடுகிறேன் ...




தொலைத்து விட்டு தேடுகிறேன் ...






இரவெல்லாம் ஒட்டி உறவாடி
விடியற் நேரம்
நாணத்தோடு விட்டுப்பிரிய
மனமின்றி
ஒட்டிப்பிரியும்
புல் நுனி பனித்துளி ....

கொலுசொலியில் பாதை
மயங்கி
கல் தட்டி நகக்கண் பெயர ,
"அம்மா" என்று நான் அலற
"அச்சச்சோ '" என எனக்காய் ,
எனக்கே எனக்காய்
நீ வீசிய பரிவுப்பார்வை ...

வருடினார்ப்போல்
நீ விளக்கி வைக்கும் பாத்திரங்கள்....

செல்லமாய் உன்மேல்
குதித்து விளையாடும்
பாமொரியன் ...

எனக்கு பசலையை
உண்டாக்கும் பதிவுகள் ...!

நீர் ததும்பும்
உன் விழிகளில் இருந்து
துளி தெரித்து விழும் முன்
உடைந்து விழுகிறது
என் உயிர் ....!

உன் சத்தமில்லா
கொல் என்ற சிரிப்பு
நீ அருகில் இல்லாத போதும்
உயிரோடு எரித்து கொல்கிறது ....!

உன் நினைவுகளில்
என்னை நான்
புதுப்பிக்கிறேன் ....

சில சமயம்
தொலைத்துவிட்டு தேடுகிறேன் ...!

உன்னால் என் மனம்
குப்பையாய்யானதால்
நீ குப்பையில் வீசியவைகள்
எல்லாம் பொக்கிசமாய்
என்னுடன் ...

குப்பைகளை எல்லாம்
குப்பையில் சேர்க்க
என்னிடம்
நீ
வருவாயா ...?

Posted on: Friday, January 28, 2011

நாளை என்பது ...!



நாளை என்பது ...!





நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும் நம்பிக்கை...!

இன்றைய பசியை
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது....
ஆனால்,
நம்பிக்கையூட்டும் ....!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது  ...!

நாளைய நம்பிக்கைத்தான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து ...!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன் ...!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு ...!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை ...!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ உனக்கு சுமையாக கூடாது ...!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம்  என்ற
நம்பிக்கைத்தான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரை ஈரல்
நிறைக்கிறது....!

நம்முன் தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயுரோடு இருந்து
உண்ண போகிறோம்
என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு ...!

வா ... நாளையை
ஒரு கை பார்ப்போம் ...!

உள்ளர்ப்பனத்தோடு  உழை ...!

நாளை, உன் வீட்டு
வேலைக்காரனாகும் ...!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டிவைக்கும்
நம்பிக்கை பசை ...!

Posted on: Thursday, January 27, 2011

தினமலர் வாரமலரில் நான் வாழ்ந்த வாழ்கை

நன்றி தினமலர் வாரமலர் 23/01/2011




வா வாழ்ந்து பார்க்கலாம் …!





வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

உயிர் சுழற்சி
காமம் சம்மந்தப்பட்டது…..!

காமம் மனம் சம்மந்தப்பட்டது…..!

அடுத்தவனின் மரணம்
தரும் பயம்
வாழ்கையை ​சொல்லித்தரும் …!

பயந்த மனம் பயத்தில்
இறந்த கால நினைவுகளில்
ஆறுதல் தேடும் ..!

எதிர்கால கனவில்
ஒளிந்துக்​கொள்ள பார்க்கும் …!

நிகழ்காலம் மட்டும்
எட்டிக் காயாய் ….

தன்னை பதிவு செய்துக்​கொள்ளும்
போராட்டத்தில்
பல முகங்கள் சூடி
தான் ​தொலைந்து போன
பரிதாபம் …

வீணான மிச்சங்கள்
கூட சில உயிர்களுக்கு
உணவாகும் ……
வீணாய் முடங்கிக்கிடப்பவன்
தனக்கே சுமையாவான் ….!

முட்டி, முட்டி ஓட்டை
உடைத்துத்தான்
கோழி குஞ்சு கூட
வெளிக்காற்றை சுவாசிக்கிறது…..

உன் வாழ்கை
உன் முன்னே…

வாழ்கை அழகான கவிதை …
வாசிக்கவும் ​செய்யலாம்..
கசக்கி தூர
வீசவும் ​செய்யலாம் …!

கடைசி நாளில்
சிலரின் சில கண்ணீர் துளிகள்
தான்
வாழ்ந்த நாளில்
நாம் சேர்த்து ​வைத்த சொத்து ……!

வா மனிதனாய்
வாழ்ந்து பார்க்கலாம் …!

Posted on: Thursday, December 9, 2010

சிற்றிதழ் அறிமுகம் - முதற்சங்கு


இலக்கியம் என்ற வார்த்​தைக்கு ​பொருள் ​கொள்வதி​லே​யே எனக்கு நீண்ட ​தேடல்உண்டு. ​
​பொருளாதாரத்​தை ஆதாரமாக​கொண்ட பத்திரிக்​கைகளில் முதல் படியி​லே​யே ​​தோற்று சிற்றிதழ்கள் பக்கம் ​சென்றால் அங்கு, ஈசல்க​ளைப்​போல் பல! அதற்குள்ளும் " யார் " (?!) இலக்கியம் என்ற ஆ​ரோக்கியமற்ற சர்ச்​சைகள்!!


இறுதியாக, அல்ல! அல்ல!! நல்ல ​தொடக்கமாக மலர்ந்திருக்கிறது முதற்சங்கு மாத இதழ், தரமான ப​டைப்புக​ளோடு!

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவரும், நமது பதிவருமான
ஐரேனிபுரம் பால்ராசய்யா முக்கிய இடம் பிடிக்கிறார். அவரது சமூக ஆராய்ச்சி கட்டு​ரைகள் நம்​மை ம​லைக்க ​வைக்கின்றன!

அக்​டோபர் இதழில் கணியான் இனத்​தை குறித்த அவரது ஆராய்ச்சி கட்டு​ரை​யை படிக்க http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post.html
இங்கு கிளிக் ​செய்யவும்.

மாதம், மாதம் எழுத்தாளர்கள் அறிமுகம் என்ற பகுதியில் வளரும் எழுத்தாளர்க​ளை அறிமுகம்​ செய்கிறார்,ஐரேனிபுரம் பால்ராசய்யா!

இலக்கியம் நாடு​வோரின் தரமான இதழான முதற்சங்கிற்கு அ​னைவரும் ஆதரவுதர ​வேண்டுகி​றேன்.

முகவரி

ஆசிரியர் திரு.சிவனி சி சதீஷ்
முதற்சங்கு
த,​பெஎண்25 இரணியல் சா​லை
தக்க​லை 629 178
கன்னியாகுமரி மாவட்டம்
​கைப்​பேசி 9442008269



அக்​டோபர் இதழில் அடி​யே​னைப் பற்றி … .
(பெரிய தாக்க மவுசை கிளிக்கவும்)

Posted on: Monday, November 1, 2010

ஓர் இந்தியனின் மன்னிப்பு கடிதம்…..!






ஓர் இந்தியனின் மன்னிப்பு கடிதம்…..!




அஹிம்சையை போதித்தவனுக்கு
நெஞ்சில் துப்பாக்கி இரவையை
பதக்கமாய் அணிவித்துவிட்டு
ஓட்டுப்​போட பணம்
பெற்றுக்​கொள்கிறோம் …!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்றவனின் நினைவு நாளில்
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம் …!

செக்கிழுத்து​பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மார்க்கில் தேடுகிறோம் …!

வெள்ளையன்
அவுட் ஆப் ​பேஷனாய் போனதால்
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது ....!

அடிமைத்தனத்தையும்
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக்கொண்டோம்..!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக்​கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு ..!

மகாத்மாவே …!
பாரதியே …!
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள் .......!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் இரத்தத்தை கூட
என்ன குருப் என வகை பிரித்து
காசாக்கி விடுவோம் ...!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம் …!

உங்களிடம்
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை .....

எங்களை திருத்த
இனி நீங்கள்
தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும் .....!

வருவாயா ...? ? ?

Posted on: Monday, October 18, 2010

கர்ப்பம் தரித்த நினைவுகள் ....!






கர்ப்பம் தரித்த நினைவுகள்....!




கோவில்​வேப்ப மரத்தில்
குழந்தை கனவுடன் கட்டப்பட்ட
துணித்​தொட்டில்களைப்​போன்ற
உன் நினைவுகளில்
என் இதயம் தாய்மை
அடைந்து தவிக்கிறது…!

உன் ​மெளன​மொழியில்
என் தாய் மொழி
மறந்து​போயின…!

நீ உதடு குவித்து
காற்றில்
பறக்க விட்ட முத்தங்களுடன்
வாழ்ந்து வருவதால் ….
மற்றவர்கள் சூழ்ந்திருக்க
விதவனைப்​போல்
தனி​மைப்பட்டு நிற்கிறேன்…!

மார்கழி மாத பனிக்காற்று
என் முகற்றை வருடும்
போதெல்லாம்….
பேருந்தில் எதேச்சையாய்
என் முகத்தை வருடிய
உன் கூந்தலின் நினைவுகளை
என்னுள் கிளிறிவிட்டு
போய்விடுகிறது ….!

உன் காந்தப்பார்வை
நிழல் நினைவுகள்
நிஜமாகாதா என்ற ஏக்கம்
சுகமான சுமையாகவே
என்னுள்
உனனோடு ….!

நிஜமின்றி நிழல் இல்லை…!
நிழல் இன்றி நிஜமில்லை …!

கர்ப்பம் தரித்த
நினைவுகளுடன்
காலம் ​போகும் முன்னே
நம் பிள்ளைகளை
கொஞ்ச நீ
வருவாயா....?

Posted on: Tuesday, October 5, 2010

தினமலர் வாரமலரும் எனது "அந்த கண நேரமும்" ...!





அந்த கண நேரம் !







தொழுநோயாளியின்
நமச்சலைப் போல்
மறுபடியும்,
மறுபடியும்...
உன் நினைவுகள்...

ஊர் உறங்கிய பிறகும்,
நீ உறங்கியிருப்பாயா
என்ற நினைப்பில் நான்!

நிலா, நிலா ஓடி வா
என்று என்
தாய் எனக்கு
அறிமுகப்படுத்திய
நிலவிற்கும்,
நீ எனக்கு அறிமுகமான பிறகு,
வரும் நிலவிற்கும்
நிறைய வேற்றுமைகளை
உணர்கிறேன்!

காரிருளை
காணும் போதெல்லாம்
விளக்கேற்ற வேண்டும்
என்ற எண்ணம் மடிந்து...
உன் செந்நிற முதுகில்
கார் கூந்தல் புரளும்
இடைவெளியில்
கடுகளவில் கிடக்கும்
அந்த
அழகிய மச்சம்...
மறக்க முயன்றாலும்
தவிர்க்க முடியவில்லை!

மவுனமாய்
பேசும் உன் விழிகள்
என் மனதை
புணர்ந்து போன
அந்த கண நேரம்...

காத்துக் கிடக்கிறேன்
போதை வஸ்து
அடிமையைப்போல்...

மற்றொரு
பார்வைக்காக!

Posted on: Thursday, August 5, 2010

தினமலர் வாரமலரில் நான் கண்ட " கலர் கனவு "

நன்றி தினமலர் வாரமலர் 01/08/2010



கலர் கனவுகள்...!





வானமகள்
வெட்கமில்லாமல்
மின்னலாய் பல் இளித்து
போனாள்...!

வானுயர மாளிகையை
கட்டிய தொழிலாளி
ஒதுங்க இடமின்றி
கட்டிட செல்வ செழிப்பை
பறை சாற்ற
நட்ட குரோட்டன்ஸ் வகை
மரங்களுக்கு இடையே
மரமாய் ஒட்டி
அன்னாந்து பார்த்து
தனக்குள் வியந்தான்....
இது நான் கட்டிய
கட்டிடமாக்கும் ....!

குடை பழுது நீக்குபவன்
பிறர் மழையில் நனையாமல்
இருக்க,
தன் வயிறு நனைய...
மழையில் நனைந்தபடி குடை
பழுது பார்த்துக் கொண்டிருந்தான்...!

இங்கே,
வேதாந்தம் கூட
சுகமாய் உணரப்படும் ...
எதை கொண்டுவந்தாய்
இழப்பதற்கு...?

இந்த
ஒரு வார்த்தைதான் ....
தாய் மடியாய்,
கலர் கலர் கனவுடன்
சுகமாய் தூங்க வைக்கிறது ...

விடியலில் வேதாந்தம்
பசியின் முன்
காணமல் போக,
எதுவுமே பெரிதாய்
தெரியவில்லை ...

உணவையும்...
ஆறுதல் தரும்
பொய் கனவுகளையும் தவிர....!

Posted on: Wednesday, July 14, 2010

குமுதம் வார இதழில் மாப்பிள்ளை ....



நன்றி குமுதம் 14/07/2010

Posted on: Wednesday, June 30, 2010

கலர் தமிழா நீ ரெடியா...?




நன்றி புரட்சிவேந்தன்: 30/05/2010 & 15/06/2010

Posted on: Wednesday, June 9, 2010

ஒரு தட்சணாமூர்த்தி கருணாநிதியான கதை .....



நன்றி புரட்சிவேந்தன்:  15/06/2010

Posted on: Tuesday, June 8, 2010

கலைஞரை அரசியலுக்கு இழுத்துவந்த நீதி கட்சி ...


நன்றி புரட்சிவேந்தன்: 15/06/2010

குமுதம் வார இதழும் எனது எதிர் வினையும்




































நன்றி குமுதம் : 09/06/2010

Posted on: Wednesday, May 5, 2010

தினகதிர் வாரகதிர் இதழில் எனது பிரியமான சுவாச கனவு

நன்றி தினகதிர் வாரகதிர் 28/02/2010




பிரியமான சுவாச கனவிற்கு....!





உன் ஒவ்வொரு
அசைவும்
பசலையாய்
என் ஒவ்வொரு அணுவையும்
தின்று கொண்டிருக்கிறது ...

கல்லூரி கடைசி நாள்...
சிறு பிள்ளைக்கு
பஞ்சு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவதுபோல்,
நீ விட்டு சென்ற
உன் பார்வை ...

இன்றும் என்
கருவிழிகளுக்கு பின்னே
கர்ப்பத்தோடு...!

நீ நின்றயிடம்....
நீ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பார்லர்...
நீ சாப்பிட்டபின் இதழொத்தி
எறிந்த காகிதம்
விழுந்த குப்பைத்தொட்டி ...
ஒவ்வொரு இடத்தையும்
மனதால் மணந்து,
பார்வையால் வருடி...
அந்த சுகத்தில்
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்....!

பொய்யாக இருந்தாலும்
உன்னுடன் வாழும்
அந்த நிமிடங்கள் ...

வேதனையாக இருந்தாலும்
இன்பமாக உணர்கிறேன்...

நீ காதலித்தாயா...?
நான் சுவாசித்தேன்...!

எனக்காகவே நீ
வாழ்வதாய்
இன்றும் நம்பிகொண்டிருக்கும்
என்னை
காலம் ஒரு நாள்
ஏளனம் செய்யலாம் ...

எங்கேனும்,
எப்பொழுதாவது
என் முன்னே தோன்றி
என் சுவாச கனவுகளை
கலைத்து விடாதே ...

சுகமான உன் நினைவுகளுடன்
கடைசி வரை
உறங்கிட வரம் தா ,
தேவதையே ....!

தினகதிர் வாரகதிரில் சீதைகள் தயார்...!

நன்றி தினகதிர் வாரகதிர் 14/03/2010


 


சீதைகள் தயார்...!



கத்து வட்டிக்காரனிடம்
கடன் பட்டவனைப்போல்
நிலை தடுமாறி
துடிக்கிறது இதயம்
நீ நடந்து சென்ற பாதையில்....

உன் பார்வை
தீண்டும் கணங்களில்
மின்சார தகன மேடையில்
வைக்க பட்டவனைப்போல்
செயலற்று கிடக்கிறேன்...

உன் சங்கு கழுத்தை
திருப்பி
புன்னகை பூவை
மலர விட்டு போகும்
உன் வாசம்
என்னை கட்டி இழுத்து
போகும்
உன் பின்னே ...

இதெல்லாம்
நீ விடலையாய் இரவல் வாங்கி
மயக்க நினைத்த
கவிதை வரிகள் தான்...

இதெல்லாம் வேண்டாம்
இராவணனே...!
வரதட்சணை கம்பிகளை
உடைத்து இந்த
முதிர் கன்னியை
காலமெல்லாம் காதலில்
மூழ்கடிப்பேன்
என்று ஒத்தை வரி
சொல் போதும்...

உன்னுடன் வனவாசம்
என்றாலும் உவப்புடன்
ஓடி வர இங்கே
சீதைகள் தயார்...!

Posted on: Thursday, April 15, 2010

பசியோடு பட்டங்கள்...!




பசியோடு பட்டங்கள்...!





கருமேகங்கள் ஓன்று கூடி
அழுது கொண்டிருந்தன...

வற்றிய மார்பில்
பச்சிளங் சிசுவை
அணைத்தபடி,
இரத்தத்தை பாலாக்க,
ஒரு துளி இரத்தத்திற்காக
சிக்னலில் ஒவ்வொரு வாகனமாக
அலைந்துக் கொண்டிருந்தாள்
அந்த பிச்சைக்காரி...!

நனையாமல் இருக்க
கோப்புகளுடன் சேர்த்து
பட்டங்களை மார்போடு
அணைத்துக்கொண்டேன் …!

அந்த பச்சிளங் குழந்தையைப்போல் ,
மார்போடு ஓட்டிக் கொண்டது
பட்டம்..!

Posted on: Wednesday, April 14, 2010

இடுகாட்டில்  காத்திருப்பேன்..!






இடுகாட்டில் காத்திருப்பேன்..!





என்னைக் கொண்டே
என் மூளை
செல்களுக்குள்
உன் பெயரை
பச்சை குத்திக்கொண்டவளே...!

உன்னுள் கரைந்து
உன் காதலில் நான்
தாய்மை அடைந்தேன்!

என் மனம்
உன்னால் குப்பையாய் போனதால் ,
நீ தீண்டி குப்பையில்
போட்டவைகள் எல்லாம்
பொக்கிசமாய் என் அறையில்..!

சிவந்து சிரிக்கும்
முற்றத்து ரோஜா...

தாவி ஓடும்
கொல்லைப்புற அணில் குட்டி ..

ஒவ்வொரு நிகழ்வும்
நொடிக்கொருதரம்
உன் நினைவுகளை
என்னுள் புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது …!

எல்லா பெண்களையும்
போல் தானே நான் ,
என்னிடம் புதுமையாய்
எதை கண்டாய்
என ஏளனமாய் கேட்டாய் ...

பிரியமே..!
என்னை உன்னில்
மட்டும் தானே காண முடிகிறது...?

வாழும் போது ஒருவராய்
வாழும் நாம்..
மரிக்கும் போது மட்டும்
நான் சிறிது
முந்திக்கொள்ள ஆசைப்படுகிறேன் ...

உனக்கு முன்
நான் மரித்து,
மக்கி, மண்ணாகி
உன்னை மலர்ப்போல்
தாங்க,
இடுகாட்டில் காத்திருப்பேன்... !

Posted on: Tuesday, April 13, 2010

வாழ்க்கை நாடகம்...!



வாழ்க்கை நாடகம்...!


நாடகம் நடக்கிறது
இயக்குனர் யாரென்று தெரியாமலே...!

முகத்திற்கு முன்னே
பணக்கட்டுகள் ...
பிடித்திட ஓடிக்கொண்டே
இருக்கிறேன் ....

என் தோளின் மீது
ஒருவன் அமர்ந்துகொண்டு
என் முன்னே பணத்தை
கட்டி தொங்கவிட்டு
வேடிக்கை பார்க்கிறான்
என்பதை அறியாமலே...

பொருளே பிரதானமான
பொருளாதார உலகில்
உறவுகள் விலை பொருளாய்...

தகனம் கூட தனமில்லையேல்
தாழ்வாரத்தில் அழுகும், உடல்..!

சேர்த்து வைத்த
பணம் எல்லாம்
வெறும் காகிதம் என்று தெரியவரும்
முதுமையில்....

நல் உறவுகளை
இளமையில் சேர்த்து
வைக்காததால்,

பணத்தை துரத்தும்
வாழ்க்கை பயணத்தில்
தொலைத்து விட்ட உறவுகளை
முதுமையில் தேடி திரிந்து
பலனில்லை...!

மனிதா...!
வாழ பணம் தேவை!

ஆனால்,
பணத்திற்காய்
பொய் வேஷம் கட்டுவதை
கலைந்து ஏறி...!

வாழ்க்கை நாடகம்
காலமெல்லாம் இனிக்கும்!
 
Tweet