Pages

Posted on: Tuesday, August 20, 2013

சுயம் தொலைத்தவளே ....!


                                                   சுயம் தொலைத்தவளே ....!

இரத்தத்தை அமுதாக்கி
கருவறையில்
பாரம் சுமந்து
உன் வேதனையில்
என்னை வெளிக்காற்றை
சுவாசிக்க வைத்தவளே ...

ஊன் தந்தாய்
உதிரம் தந்தாய்
உயிர் தந்தாய்
நானே உன் உலகம்
என்று ஆனந்தப்பட்டாய் ...

என் கோர முகம்
கோணாதிருக்க
இயல்பு மாற்றி
சுயம் தொலைத்தாய் ...
உன்
உலகை என்னைச்சுற்றி
அமைத்துக்கொண்டாய் ...

வறுமையிலும்
ஈர விறகோடு விறகாய்
பொசுங்கி
என் வயிற்றுப்பசி தீர்க்க
உன்
வயிற்றளவை குறுக்கினாய் ...

நான் மிடுக்காய்
உடை உடுத்தி பள்ளி செல்ல
நீயோ
ஒட்டுடையில் ஆனந்தப்பட்டாய் ....

கருவறையில்
மட்டுமல்ல
நான்
வளரும் போதும்
உன் இரத்தம் குடித்துதான்
வளர்ந்தேன் ...

மனிதனாய் என்னை
வெளியுலகிற்கு
காட்டியவளே ...

இன்று
இரக்கமற்ற முதுமை
உன் உடலை செல்லாய்
அரித்து செல்லாக்காசாய்
படுக்கையில் குழந்தையைப்போல்
கிடத்தியிருக்கிறது ....

எனக்காய் முழுமையாய்
சுயம் மறந்து,
தொலைந்து, கரைந்து
போனவளே ....

உனக்கு நான்
தாயாய் ...
எனக்கு நீ
குழந்தையாய்
ஆகும்
பாக்கியத்தை தவிர
வேறு என்ன
பிரயாசித்தம்
செய்து விட முடியும் ....?

                                         - எஸ்.ஏ.சரவணக்குமார்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// வேறு என்ன பிரயாசித்தம்...? ///

கலங்க வைத்து விட்டீர்கள்...

Unknown said...

கவிதையும் படமும் மனதை பிசைகிறது.......திருநின்றவூரில் இருந்து மனதில் நிற்கும் கவிதைகள் ! நன்றி !

Yaathoramani.blogspot.com said...

படமும் கவிதையும் மனதை
நிலை குலையச் செய்துதான் போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Post a Comment

 
Tweet