Pages

Posted on: Tuesday, June 23, 2009

முகம் தொலைத்த உடல்கள்....!
முகம் தொலைத்த உடல்கள் .....எப்பொழுதாவது வந்து போகும் டவுன் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றேன்!

இருபது வருஷம். நேற்று போன மாதிரி இருக்கு. ஆனா, இந்த கிராமம் மட்டும் அதே பதினாறு வயசு குமரி....அன்னைக்கு பார்த்த மாதிரியே ...வயுத்து பாட்டுக்கு நகரத்துல நரகமா தெரியுற வாழ்கை இங்கே, சொர்க்கமா தெரியுது…!

பழைய சம்பவங்களை அசைபோட்ட படியே, வரப்பில் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இருபது வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் .... திருமணம் கூட சென்னையிலயே நடந்ததால வர வாய்ப்பு இல்லாம போனது.
இப்படியே இன்னும் ரெண்டு பர்லாங் போவணும் ... மாட்டு வண்டி ஏதும் தென்பட்டா நல்லாயுருக்கும் ...போற வழில வாய்க்கால் ஒண்ணு …ஒயிலா பருவ பெண் இடுப்ப ஆட்டி,ஆட்டி நடக்குற மாதிரி வளைஞ்சி, வளைஞ்சி ஓடும்... !
அந்த கரைல ஏதாவது மரத்துக்கு பின்னாடி மறைவா திருட்டு தம் அடிக்கிற சுகம், பைவ்ஸ்டார் ஹோட்டல்ல பாரின் சிகரட் அடிச்சாலும் கிடைக்காது....!
வரப்போரம் என் பால்யகால நண்பன் முனியன் கோவணத்தை பாய்த்துக்கொண்டு, வரப்பை வெட்டி தண்ணீரை அடுத்த பார்த்திக்கு திருப்பிக் கொண்டிருந்தான். ஒட்டிய வயிற்றுடன், தலை முக்கால் வாசி நரைத்து, காலம் அவன் மீது ஆதிக்கம் செய்ய தொடக்கி இருந்தது!

என் தலையை தடவிக்கொண்டேன்! 'டை' கைகர்யத்தில் இன்னும் இளமையாக தான் தெரியுற...!

நான், முனியன், ஐயர் பையன் சங்கரன் இன்னும் ஒரு நாளு, ஐந்து பேர் ஒரு குருப்பாத்தான் அலைவோம். பண்ணாத சேட்டை இல்லை...

முனியான பார்த்த மாத்திரத்தில், அந்த கால நினைவுகள், இளமையை என்னுள் ரீ-சார்ஜ் செய்ய... கையில் இருந்த லக்கேஜை அப்படியே வரப்பில் போட்டு விட்டு, என்னை அறியாமலே, அனிச்சையாய், "டேய்....முனியா ....!" என்றபடியே வயலில் இறங்கினேன்.

சேறு நிறைந்த வயலில் இறங்கும் போது பேண்டை மடித்து விட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல், அப்படியே மண் வெட்டியுடன் சேர்த்து அவனை அலக்காக தூக்கி சுற்றினேன்.

"ஐய்....யா .யா ..." துள்ளிகுதித்து எதோ அவன் தவறு செய்து விட்ட மாதிரி குறுகி நின்றான்!

"டேய்...நான் சரவணன்டா .. ஊ நண்பன் ...ஊ கூட ஒண்ணா ஊரு சுத்தின அதே ... நீ, நான் சங்கரன்லா ஒண்ணா சேர்ந்து சாமியார் தோப்புல மாங்காய் திருடி மட்டிகிட்டோமே ...."

முனியன் மறந்து இருப்பான் என்ற நெனைப்பில் பழையதை நினைவுபடுத்தும் முயற்ச்சியில் இறங்கினேன்!

"இருக்கலாங்கய்யா ...அதுலா, சின்னதுல செஞ்சது ...புத்தியில்லாத வயசு ... தராதரம் தெரியாதது ....அதுக்குன்னு பட்டணத்துல படிச்ச, காரை வீட்டு புள்ள நீங்க எங்க? ..நான் எங்க? ...நமக்கு நம்ம பவுசு தெரியவேணாமாய்யா ...? "

சுதாகரித்துக்கொள்ளும் முன், எங்கோ மறைந்துவிட்டிருந்தான்.

ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்... நாம் ஏதோனும் தவறு செய்துவிட்டோமோ ...?

யோசனையுடன் நடையை தொடரும் பொது தான் சங்கரன் நினைவு வந்தது.

சங்கரன் சிவன் கோவிலில் பூசாரியாய் இருப்பதாய் அம்மா கடிதம் போடும் போது ஒரு கடிதத்தில் சொல்லியிருந்தாள். சிவன் கோவிலை தாண்டும் போது நினைவுக்கு வர, அவனை பார்த்துவிட்டு போகும் ஆவலில் உள்ளே நுழைந்தேன்.

சங்கரன் பஞ்ச கச்சம் கட்டி, நெற்றி முழுக்க திருநீர் பூசி அமர்க்களமாய் இருந்தான். பல சுற்றுக்கள் பெருத்தும் இருந்தான். குடுமி முன்பைவிட பெரிதாய் இருந்தது.

எத்தனைவாட்டி இவன் குடுமியை அவிழ்த்துவிட்டு கலாச்சியிருக்கோம்.... அவன் குடுமி மேல எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு!

அதே மாதிரி அவன் கொண்டுவர்ர புளியோதரை ....சும்மா வாசனையே ஆளை தூக்கும் ... அதுல கிடக்குற வேர்கடலையை பொருக்கி சாப்பிடறதே தனி சுவை!

சங்கரன் ஆரத்தி தட்டுடன் கருவறையை விட்டு வெளிவந்தவன் எல்லோர் முன்பும் நீட்டுவது போலவே என் முன்பும் தட்டை நீட்டினான்.

"சங்கரா .."

"வாங்கோ ..சென்னைல இருந்து எப்போ வந்தேள்? ஆத்துல ....."

பார்மாலிட்டி கேள்விகளை அடுக்கியவன், கூட்டம் சேர அடுத்த ஆரத்திக்கு தயாரானான்.

அவன் முகத்தில் பால்யசிநேகிதனை பார்த்த மகிழ்ச்சியை காணவில்லை....இரண்டு வார்த்தையில் உன்னை எனக்கு தெரியும் என்பதாய் காட்டிவிட்டு, புரியாத மொழியில் கடவுளிடம் பேச போனவனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கருவறைக்குள் ஓடிபோய் குடுமியை அவிழ்த்துவிட்டு சேட்டை செய்ய பழைய நினைவு துரத்தினாலும், ஒரு வேளை இவர்கள் அவர்களாய் இல்லாமல் இருப்பார்களோ...? மெல்ல வெளியேறினேன்...!

சல சல வென ஓடிவரும் வாய்க்கால் கரையில் அமர்ந்தேன்.

இதே வாய்க்கால்ல என் சட்டைய சங்கரன், அனிபா, முனியன்னு எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையா புடிச்சி ... அப்படியே அள்ளுனா...எங்க இருக்குற மீனும் நம்ம சட்டைக்கு ஓடிவந்துடும் ....
அதோ அந்த பாறைக்கு மறைவா சுட்டு சாப்பிட்டோமே ..... கட்டடிச்சிட்டு, ஒண்ணா மலையாள படம் பார்த்தது .....எல்லாத்தையும் இவங்களால மட்டும் எப்படி?...எங்கே தொலைந்து போனார்கள் .....?
ஊளை மூக்கை உறிஞ்சிக்கிட்டு சுத்தும் போது குருக்கள் மகனும் தெரியல ... வெட்டியான் மகனும் தெரியல ....வளர்ந்துட்டா மட்டும் எப்படி...? நம்மலோடவே சேர்ந்து அதுவும் வளர்ந்துடுதா ...? காலம் அவர்களை தொலைத்து விடுகிறதா....?

வாய்க்காலின் மறு கரையில், "ஆய் ...ஊய் ..." என்று சிரிப்பொலி கேட்க, சிந்தனை கலைந்து தலைநிமிர்ந்து பார்த்தேன்.

அதே போல், நான்கு, ஐந்து நண்பர்கள் கூட்டம். சத்துணவில் கொடுத்த சைசுக்கு ஒத்து வராத அந்த காக்கி டவுசரை ஒரு கையால் பிடித்தபடியே ஒரு அய்யர் பையனின் குடுமியை அவிழ்த்துவிட துரத்திக்கொண்டிருந்தனர்!
ஒருவனின் கையில், சட்டைத் துணியில் சில மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தது!

இதே மாதிரித்தான்...ரொம்ப நாள் கூட இல்ல ...இருபது வருஷம் தான்... அந்த நாட்கள் இனி தேடினாலும் கிடைக்கவா போகிறது ...? இப்படின்னு தெரிந்திருந்தால், வளராமலாவது இருந்திருக்கலாம் ....!

வளர, வளர ஜாதி, மதம், அந்தஸ்த்துன்னு விதவிதமா உடுப்பை போட்டுக்கிட்டு ...நம்மள தொலைச்சிட்டு ..... உண்மையான மனிதர்கள் நிச்சயமா வளர்ந்துட்டா கிடைக்க மாட்டார்கள்....

அவர்கள் வேறு யாரோ ... இவர்கள் வேறு யாரோ .... இங்கே முண்டங்கள் முகம் தின்று வாழ்கின்றன...!

மனம் நிறைய வேதனையோடு தலை குனிந்து நடந்துக் கொண்டிருந்தேன்...!

(முற்றும்)

2 comments:

மொழி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

குடந்தை அன்புமணி said...

//இங்கே முண்டங்கள் முகம் தின்று வாழ்கின்றன...! //

நல்லாருக்கு நண்பரே! அந்த ஒற்றை வரியில் இந்த உலகத்தை உள்ளடக்கிவிட்டீர்கள்! வெற்றிபெற வாழ்த்துகள்!

Post a Comment

 
Tweet