Pages

Posted on: Saturday, January 19, 2013

அலெக்ஸ் பாண்டியன் - விமர்சனம்




இப்பலா சுவிஸ் போங்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண கெடுபிடி அதிகமா  இருக்கேன்னு பீல் பண்றவங்க, ஏமாத்துன பணமோ இல்ல லஞ்ச பணமோ உங்ககிட்ட அதிகமா இருந்தா நீங்க அலெக்ஸ் பாண்டியன் பட பேனரை எந்த தியேட்டர்ல பார்த்தாலும் தாராலமா டிக்கட் எடுத்துட்டு படம் பார்க்க போகலாம்.

கதைன்னு பார்க்கபோனா, புளிச்சு போன மாவுல மாசால் தோசையை சுட்டு, அதை மறைக்க மேல முந்திரியையும் பாதாமையும் தூவி பரிமாறிய கதை.

தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ் நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கிடைக்காததால், அவர் மகளை கடத்தி, மிரட்டி அனுமதி கேட்கிறது வில்லன் கூட்டம்.  அவர்கள் முதலமைச்சர் மகளை கடத்த கூலிக்கு அமர்த்தியவன் தான் கதாநாயகன், உண்மை தெரிந்து வழக்கம் போல் கதாநாயகியை காப்பாற்றி முதலமைச்சரிடம் ஒப்படைக்கிறான், கதாநாயகன்.

கதாநாயகனும் கதாநாயகியும் இருந்தா லவ்வியே ஆவணும் என்கிற தமிழ்நாட்டு இரசிகனின் எதிர்பார்ப்பை பொய்யாக்க விரும்பாமல், லவ்வூவூவூவூவூ ..

கை நீட்டி காசு வாங்கிட்டோமேன்ற குற்ற உணர்ச்சில கார்த்திக்கும் பாவம் ரயில் மேலலா பறந்து, பறந்து சண்டை போட்டு இருக்காரு.  அனுஷ்காவும் காசு வாங்கிய பாவத்திற்கு தொடைய காட்டியிருக்காங்க.

படத்துல உருப்படியான விசயமே சந்தானம் காமடித்தான்.  தெரியாம காசு கொடுத்து டிக்கட் எடுத்தவங்க, காமடிக்காக காசு கோடுத்ததா நினைத்துக் கொள்ளலாம். அதையும் பிட்டு, பிட்டா ஆதித்தியாவுல போட்டுடுவாங்க.

மொத்தத்துல வர்ர தமிழ் புத்தாண்டிலியோ இல்ல அதைவிட சீக்கிரம் வர்ர ஏதாவது விடுமுறைக்கோ, சன் டிவில "உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக … " என்கிற விளம்பரத்தை பார்க்கலாம்.

Posted on: Wednesday, January 2, 2013

காமத்தில் தாய்மை தேடல் ....



தேடல் ......!






ஒரு போதும்
காமம் நிறைவடைவதில்லை,
தாய்மை தேடலில் …!

காமம் ...
அது,
ஆழ் மனதின்
தாய்மை தேடலில் தோற்ற
கண்ணீர் துளிகள் ...!

பெரிய குழந்தைகளின்
தாய்மை தேடல்
எப்பொழுதுமே
காமத்தில் இருந்துத்தான்
தொடங்குகிறது ....
சில சமயம் காமம்
என தவறாக அர்த்தம்
கொள்ளப்படுகிறது ....!

பெண்களின் மார்பின் மீது
ஆண்களுக்கு  ஈர்ப்பு உண்டு ...
அது காமத்தை தாண்டி
தன் தாயின் பால் சுரந்த
வெது வெதுப்பின்
தேடலின் எச்சம் ...!

காமம் எப்போதும்
எல்லோருக்கும்
காமமாகவே
இருந்துவிட முடிவதில்லை ...

சில நேரங்களில்
பல நேரம்
மனதிற்கும் காமம் உண்டு,
தாய்மை தேடலில் ...!

Posted on: Friday, November 23, 2012

என் முதல் காதலியை இழந்து விட்டேன் …..



வயசாயிட்டாவே …. இனி புரோயோஜனம் இல்லன்னு தெரிஞ்சிட்டா … கூடவே, மேனா மினுக்கியா ஒருத்தி வந்துட்டா … அது வரை கை கோர்த்து கூட வந்தவளை அப்படியே விட்டுட்டு போறதுதானே மனித கூட்டம்..? நான் மட்டும் விதிவிலக்கா என்ன…?

என் காதலியை பிரியும்படியா ஆயிடிச்சு.  அதுவும் பதினோரு வருசமா … என் கூட இளைச்சிக்கிட்டு வந்தவள … என் மனைவி கூட எனக்காக இப்படிலா கஸ்டப்பட்டதில்ல .... 

நான் மழைல நனையும்போது நனைந்து, வேகாத வேயில்ல எனக்காக வாசல்லயே காத்து கிடந்து, என்னை பார்த்த மாத்திரத்துல அதுவரை பட்ட கஸ்டத்தை எல்லாம் மறந்துட்டு காதலோட ஒரு 'லுக்' விடுவா பாருங்க … அது வரை ஆபிஸ்ல இருந்த டென்சன்லா ஒடிபோய் அப்படியே ஜில்லுன்னு ஆயிடும்.  அப்படியே பாசத்தோட அவள வருடிக்கிட்டே, ஆபிஸ் விசயத்தலா அவாகிட்ட சேர் பண்ணிக்கிட்டு வீடு வந்து சேர்ரது …நாளைக்கான புதுவேகத்தை கொடுக்கும்! 

காதலை வேற யாரும் எனக்கு இப்படி காதலோட. தாய் பாசத்தோட சோல்லி கொடுத்தது இல்லை….

மனசே கேக்கல. அவளை அப்படியே அங்க விட்டுட்டு, புது மேனா மினுக்கியோட வெளிய வரும் போது…. தானே தன் கனவனுக்கு ரெண்டாவது திருமணம் செஞ்சிவச்சிட்டு அவங்க ஜோடியா வெளிய போகும் போது வழி அனுப்பிவைக்கிற மனைவி மாதிரி … என்னை பார்த்து 'வுட்டுட்டு போறீயா?' ன்ற மாதிரி ஒரு லுக் விட்டா பாருங்க பச்! என் உயிர் என்கிட்டயே இல்ல …

சந்தோசமோ, கோபமோ முதல்ல அவக்கிட்டத்தான் காட்டியிருக்க … அதுக்காக அவா ஒருவாட்டி கூட மொகத்த காட்டுனதுயில்ல … 'கௌம்பு'ன்னா போதும் சந்தோசமா கௌம்பிடுவா …

என் மகன் எனக்குமேல 'பீல்' பண்ணி அவளை கெட்டிபிடிச்சு கிஸ் பண்ணிட்டு, மனசே இல்லாம வந்தான்.

"இதுக்கு மேல இதை ரிப்பேர் பார்க்க முடியாது சார்"ன்னு மெக்கானிக் சண்டைக்கு வந்த பிறகு, வேற வழியே இல்லாமத்தான் என் பழைய டி,வி,எஸ் விக்டரை கொடுத்துட்டு புது டூ வீலர் வாங்கும்படியா ஆயிடிச்சு. 

புது காதலி!  புது நட்பு!! ஆனாலும் முதல் காதலை மறக்க முடியாமல்....

Posted on: Tuesday, November 13, 2012

கந்தக தீபாவளி ...!




பட்டாசு வெடித்து

தீபாவளி கொண்டாடுங்கள்...!


பட்டாசு சத்தம்

கந்தக பிஞ்சுக்களின்

கால் வயிற்று கஞ்சி...!


கந்தக கிடங்கில்

கருகிய மொட்டுக்களின்

பச்சை இரத்த வாசம்...


மகரந்த கனவுடன்

மொட்டோடு கருகிய

எதிர்கால....

மருத்துவர்...!

பொறியாளர்...!

விஞ்ஞானி ....!


கந்தக குளத்தில்

தன் சந்ததியாவது

மலரும் என்ற நம்பிக்கையில்,

பல செடிகள்

தலைமுறை,

தலைமுறையாய்.....

மலடாய்...!
 
விடிந்தால்

தீபாவளி....

எங்களுக்கும் தான்....!

கந்தகம் வெடித்து

சிதறும் சத்தத்தில்

எங்கள்

வயிறு சிரிக்கும்...!


கங்கா ஸ்நானம்

செய்யாவிட்டாலும்

கங்கைக்கு ஒன்றும்

பாதகமில்லை....


பட்டாசு சத்தம்

உங்களுக்கு வேடிக்கை...!

எங்களுக்கு

கால் வயிற்று கஞ்சி...!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

Posted on: Monday, November 12, 2012

இது மக்களுக்கான அரசு என நிருபித்த அதிகாரிகளுக்கு, இணைய எழுத்தாளர்களுக்கு நன்றி! நன்றி!!!!



21/10/2012 அன்று எனது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்( http://nellaikavisasaravanakumar.blogspot.in/2012/10/blog-post_21.html )  மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ????? என்ற தலைப்பில் சென்னை அருகே பட்டாபிராமில் பொதுமக்களுக்கு பயன்படும் ரேசன் கடை போதிய பாதுகாப்பற்ற முறையில் புதர்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதை வேதனையோடு வெளியிட்டிருந்தேன்,
 அதை கண்றுற்ற பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக அக்கடையை சி.டி.எச் சாலையில் மாற்றி அது உடனடியாக செயல்படவும் உத்தரவிட்டிருந்தனர்,
இது இணைய எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெற்றி,
எனது இடுக்கையை தங்களது வலைப்பூ,முகநூல் மற்றும் டிவிட்டரில்  பகிர்ந்து இவ்வளவு பெரிய சாதனைக்கு துணையிருந்த அனைத்து இணைய ஏழுத்தாளர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!!!


Posted on: Sunday, October 21, 2012

மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ?????

மக்களாட்சி ... இது மக்களுக்கான ஆட்சி ?????

Posted on: Wednesday, October 17, 2012

கண்ணீரின் சிரிப்பு ....!

 

 

 

 

 

 

 பாஞ்சாலியின் அவமானம்

மகாபாரதம்...!

சீதையின் வேதனை

இராமாயணம் ....!

அடிமை வாழ்வின்

கண்ணீர் துளிகள்

சுதந்திர தீ .....!

வலிகள் இல்லாமல்

காயங்கள் இல்லை ...!

காயங்கள் இல்லாமல்

மிதி வண்டி கூட

பழக முடியாது ....!

பாறைகள் தொழப்பட

வேண்டுமானால்,

உளியின் வலி

பொருத்துத்தான் ஆக வேண்டும் ....!

தீயினால் சுடப்படாமல்

தங்கத்தை பட்டை தீட்ட

முடியாது ....!

தோழா ...!

நீ மட்டும் என்ன

விதி விலக்கா ...?

வெத்து ஏட்டில்

மாங்காய் அறுவடை

செய்ய ....?

ஏர் பிடிக்கும் கரங்களும்,

இரும்படிக்கும் தோள்களும்

வாழ்வின் ஆதாரம் ...!

வாழ்வின் சுவராஸ்யம்

பசி ….!

பசியின் போராட்டம்

உழைப்பு ....

உழைப்பின் பயன்

உயர்வு ....!

போராட்டத்தை நேசிக்க

கற்றுக்கொள் ....

உன்னை நாளைய

உலகம் நேசிக்கும் ....!

Posted on: Thursday, August 9, 2012

மரண சுகமடி நீ எனக்கு ....!



மரண சுகமடி நீ எனக்கு ....!

மாம்பழத்து வண்டைப்போல்
தடம் காட்டாமல்
உள் புகுந்தவளே ....!

வண்டைப்போல் உயிர்
குடிக்கிறாய் ...
உயிர் குடிக்கும்  அந்த
மரண சுகம் வேண்டி
போதை வஸ்த்து அடிமையைப்போல்
உன்னை தேடுகிறேன் ...

எனது ஒவ்வொரு
கணமும் உன் நினைவுகளால்
நிறைந்த்திருக்கிறது ...

நீ நிறைந்திருக்கும்
எனது கணங்கள்
என்னை வாழ தூண்டுகின்றன ....!

உறங்கப் போனால்
கனவில் நீ வருவாய்
என விழித்திருத்தலும் ....

தெருவில் நீ வருவாய்
என உறங்கப்போவதும் ...

மரணத்திற்கும்
வாழும் ஆசைக்கும்
இடைப்பட்ட  மரண சுகமடி
நீ ...!

காதல் ஒரு  ...
காதுகளற்ற ...
கண்களற்ற ..
மூளையற்ற  மாற்றுத்திறனாளி ...!

வாழ்கை என்பது
வாழ  ஊக்கமளிக்கும்

ஊன்று கோள் ...!


ஊன்று கோளாய்
நான் உனக்கும் ...
நீ எனக்கும் ...!
இறுதிவரை
துணைபோவோமா ...?

Posted on: Monday, May 14, 2012

குங்குமம் வார இதழில் இரும்பு இதயம்

நன்றி குங்குமம்05/03/2012




Posted on: Monday, March 5, 2012

தினமலர் வாரமலரில் நாளை என்பது ...






நாளை என்பது ...




 நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும் நம்பிக்கை!

இன்றைய பசியை,
நாளை கிடைக்கப்போகும்
உணவு பசியாற்றாது...
ஆனால்,
நம்பிக்கையூட்டும்!

நாளை
விருட்சமாவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பிரமாண்ட மரம் கூட,
சிறு விதையுள்
தன்னை சுருக்கி
தவம் கிடக்கிறது!

நாளைய நம்பிக்கைதான்
இன்றைய அவமான
வலிகளுக்கெல்லாம் மருந்து!

நம்பிக்கை இழந்தவன்
தன்னை இழந்தவன்!

நேற்றைய விதைப்பே
இன்றைய உணவு!

அறுவடைகள்
காலதாமதமாகலாம்
ஆனால்,
பொய்ப்பதில்லை!

மரத்திற்கு பழம்
சுமையாகலாம்
ஆனால்,
நீ, உனக்கு சுமையாகக் கூடாது!

அடுத்த நொடியும்
உயிர் வாழ்வோம் என்ற
நம்பிக்கைதான்
வெளிவிட்ட காற்றை
மீண்டும் நுரையீரல்
நிறைக்கிறது!

நம்முன், தட்டில் கிடக்கும்
ஒவ்வொரு பருக்கையும்
அடுத்த நொடி நாம்
உயிரோடு இருந்து
உண்ணப் போகிறோம்
என்ற நம்பிக்கையின்
வெளிப்பாடு!

வா... நாளையை
ஒரு கை பார்ப்போம்...
உள்ளர்ப்பணத்தோடு
உழைப்போம்!

நாளை - உன் வீட்டு
வேலைக்காரனாகும்!

நாளை என்பது
உடலை உயிரோடு
ஒட்டி வைக்கும்
நம்பிக்கை பசை!

Posted on: Monday, January 30, 2012

தினமலர் வாரமலரில் ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!

நன்றி தினமலர் வாரமலர் 30/01/2012






ஒரு இந்தியனின் மன்னிப்புக் கடிதம்!





அகிம்சையை போதித்தவனுக்கு,
நெஞ்சில் துப்பாக்கி ரவையை
பதக்கமாய் அணிவித்து,
ஓட்டுப் போட பணம்
பெற்றுக் கொள்கிறோம்!

'ஜாதிகள் இல்லையடி பாப்பா'
என்றவனின் நினைவு நாளில்,
அவனின் புகைப்படத்திற்கு
மாலை அணிவித்த கையோடு
ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு
உடன்படுகிறோம்!

செக்கிழுத்து பெற்ற
சுதந்திரத்தை
டாஸ்மாக்கில் தேடுகிறோம்!

வெள்ளையன்,
"அவுட் ஆப் பேஷனாய்' போனதால்,
ஏமாற்றுக்காரர்களின் வெள்ளை உடை
பேஷன் ஆனது!

அடிமைத் தனத்தையும்,
சுகமான சுமையாகவே
அனுபவிக்க கற்றுக் கொண்டோம்!

எங்கள் உரிமையை
நாங்கள் விட்டுக் கொடுப்பதும் இல்லை...
பணமாகவோ, மூக்குத்தியாகவோ
கொடுத்தால் மட்டுமே ஓட்டு!

மகாத்மாவே...
பாரதியே...
தயவு செய்து மீண்டும்
வந்து விடாதீர்கள்!

எங்களுக்காக நீங்கள்
சிந்தும் ரத்தத்தை கூட,
"என்ன குரூப்' என வகை பிரித்து
காசாக்கி விடுவோம்!

கோவணம் போதும் என்றால்
மேலாடை எதற்கு என்று
உருவி விடுவோம்!

உங்களிடம்,
எங்களை மன்னிக்கும்படி
கேட்க எங்களுக்கு தகுதியில்லை!

எங்களை திருத்த
இனி நீங்கள்
கைத்தடியை தூக்கிப்பிடித்து
வந்தால் மட்டும் தான்
முடியும்...
வருவீர்களா? 

Posted on: Tuesday, October 11, 2011

பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!




பயணத்திற்கு உதவாத மாய கப்பல் ……….!

 


கனவுப் போலத்தான் 
வாழ்க்கை ……!

கனவு விடிந்தால் 
கரைந்து போகும் ….
வாழ்க்கை கனவு 
கலைந்து எழுந்தால்
உடன் நடித்த ஒரு
கதாபாத்திரம் காணாமல்
பேயிருக்கும் ………!

பணம், பதவி, மரியாதையெல்லாம்
நாம் உண்ணும் உணவைப்போல்,
ருசிக்க , ருசிக்க பசிக்கும்
ஆனால்,
நிரந்தரமின்றி வீணாய்ப்போகும் ……..!

ஆயிரம் பேர் சூழ்ந்திருக்க
நான் யார் தெரியுமா?
என்று கேட்கும் ஆணவம்
அதே கேள்வியை
தனிமையில் தன்னை நோக்கி
கேட்க  ’நான்’ 
காணாமல் போயிருக்கும் …..!

காலுக்கு கீழ் அடிமையைப்போல்
கிடக்கும் பூமி,
-நிரந்தரமானது ……!

நானே எஜமான் என
மார்தட்டி திரிந்தவன்
மக்கி, மண்ணாய் அதே
பூமியோடு ஜக்கியமாவது
வாழ்வியல் சூத்திரம் …..!

உன்னை
எரிக்கலாம்,
அல்லது,
புதைக்கலாம் ……….

இதுவரை நீ சேர்த்து வைத்த
சொத்துக்கள் ……
சொந்தங்கள் ….
பதவிகள் …..
அதிகாரங்கள் ….
தம்பட்டங்கள் ….
அடுத்தவர்களின் வயிற்றெரிச்சல் …
ஆசிர்வாதங்கள் ….
ஏதேனும் துணைவருமா …. ?

தீ சுடும் …!
வாழ்ந்தோர் சொல்கேட்டும்
தெளியலாம் …
தொட்டுப்பார்த்தும் பாடம் கற்கலாம் ….!

ஆறடி நிலம் கூட
உறுதியில்லாத வாழ்வில்,
கொண்டு போவதற்கு 
என்ன இருக்கிறது ….?

வாழ்ந்த நாளில்
உனக்கு பயந்து எத்தனை பேர்
உன்னுடன் வந்தார்கள்
என்பது பெரிதில்லை …..

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை 
நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….!

மனிதனாய் பிறப்பது எளிது ….
மிருகமாய் வாழ்வது எளிது …..
தெரு நாயைப்போல் 
செத்துப்போவது எளிது …..

நீ
மனிதனா ….?
மிருகமா ….?

உன் கடைசி யாத்திரையில்
கண்ணீருடன் வருகிறவர்களின்
எண்ணிக்கை நீ வாழ்ந்த
வாழ்க்கையை சொல்லிவிடும் ….

Posted on: Thursday, September 29, 2011

எனக்கே, எனக்காக .. கண்ணீரோடு காதல் சொல்லிப்போ ...

நன்றி பதிவர் தென்றல் செப்டம்பர் 2012



இடமாற்றுப்   பிழை  நீ எனக்கு ....


 
 
 
 
 
 
கடவுள் அப்படி ஒன்றும்
நல்லவனில்லை ....

பிறர் துன்புறுவதை கண்டு
இன்புறும் கொடிய
மனம் படைத்தவன் ....

இல்லாதிருந்தால்,

உயிரின் பகுதியே ...!
உன்னை படைத்தவன்
என்னையும் படைத்திருப்பனா ...?

பொய்கள் எல்லாம் மெய்களாய் ,
மெய்கள் பொய்களாய்
மாறிப்போன இடமாற்றுப் பிழை
நீ ....

இரவில் வரும் நிலவில்
ஆரம்பித்து
மாலை வரும் தென்றல் வரை
உன் நினைவுகளை என்னுள்
பதியமிட தவறுவதில்லை ...

விடியற் நேரம்
துளிர்க்கும் புல் நுனி
பனித்துளி கண்டு
என் பசலையில் துளிர்த்த
உன் கண்ணீர்த் துளியோ  என
என் மனம் உடைந்து அழுகிறது ...

பொய்யில் மெய் கண்டு
பொய் என தெரிந்தும்
பொய்யாய் வாழும் சுகம் தேடி
உன் நினைவு போதையில்
திரிவதும்
ஒரு வகை தவம் தான் ...!

தவத்திற்கு தவமேற்றி
இந்த உடல் உயிரை
அடைந்து முழுமை பெற
என் உயிரின் ஆதாரமே ...!

நீ வா ...

அல்லது,

எனக்காக ...
எனக்கே, எனக்காக …
ஒரே ஒரு துளி
கண்ணீரோடு காதல்
சொல்லிப்போ ...

கவிஞனாய்
வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ...!

Posted on: Wednesday, September 28, 2011

தாம்பத்தியம் போல் சுயம் கொண்டது முதுமை ...!








 வாழ்க்கையும் வாழ்பவர்களும் .....


 
 
 
 
 
முதுமை வாழ்வின்

மொழி...!

வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்களின் வழிகாட்டி...!

வாழ்க்கை சுழற்சியின்
இரண்டாவது குழந்தை பருவம்
முதுமை...!

தான் பெற்ற குழந்தையிடமே
தான் குழந்தையாகி போகும்
பரிணாமம் ...!

தாம்பத்தியம் போல்
சுயம் கொண்டது முதுமை ...!

அனிச்ச மலராய்
மனமிருந்தாலும்

வாடுவதை யாரும்
பொருட்படுத்துவதில்லை ....!

சுருங்கிய முகத்தை விட
சுனோ பூசிய முகம்
ஈர்ப்பானதால்,

இரும்பு இதயத்தை  பெற்றவர்கள்
இரும்பு கட்டிலில்
முதியோர் இல்லத்தில் ....!

கிரிச்சில் மகன் ...

முதியோர் இல்லத்தில் பெற்றோர் ...

வெந்ததை அவசரகதியில்
அள்ளிப்போட்டு,
எட்டு மணி பஸ்ஸை பிடித்து,
சம்பாதித்து  என்ன
 செய்ய  போகிறோம் ...?

நாளை
எதோ ஒரு முதியோர் இல்லத்தில்
எதோ ஒரு இரும்பு கட்டிலில்
படுத்துக் கிடக்கவா...?

மனிதா ...!
வாழ்க்கை அழகிய கவிதை ....

கூச்சலிடும் குழந்தைகள் ...
கூடத்தில் "டொங் டொங்.."  என
வெற்றிலை தட்டியபடியே
அளவாடும் பெற்றோர் ...
தோட்டத்தில்,
துள்ளி குதித்து திரியும் அணில் ...

நினைத்திடவே ஆனந்தம்
பெருகுகிறது ...

வாழ்க்கையை வாழ்ந்து
பார்க்க வேண்டும் ...

நாட்களை  நகர்த்திப் போவது
பாவம் ...!

வாழ்கையை வாழாமல்
வெந்ததை தின்று
பணத்தின் பின் திரிதல்
பிணத்திற்கு சமம் ...!

நாளைய நமது
முதுமை சுகமாய் இருந்திட ,

நமது குழந்தைகளுக்கு
நாம் தான் கூட்டுக் குடும்ப
வாழ்க்கையை சுவைக்க
கொடுக்க வேண்டும் ...!

வாழ்க்கை அழகான கவிதை ...!

கூச்சலிடும் குழந்தைகள் ..
கூடத்தில் அனுபவ முதிய பெற்றோர் ...
மிகவும் ஆதரவாய், பாதுகாப்பாய்
உணரும் நம் மனம் ...!

வாழ்க்கை சுழற்சியின்
அழகிய பருவம்
முதுமை ..!
 
Tweet